கஞ்சா தோட்டம் அமைத்த காங்கிரஸ் தலைவர் அதிரடி நீக்கம்..!


குளித்தலையில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு கஞ்சா தோட்டம் அமைத்த காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் அருகே மயிலம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது தோட்டத்தில் சோளப்பயிர், மல்லிகை பூ செடிகளுக்கு இடையில் ஊடு பயிராக கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்தது.

இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த கஞ்சா பயிர் செடியை கடவூர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் என்பவர் மயிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் தோட்டத்தை 2 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.

இதை அருணாசலத்தின் மாமனார் தங்கவேல் (வயது 70) மூலம் பராமரித்து வந்துள்ளார். தேனி மாவட்டம் வருசநாட்டைச் சேர்ந்த முருகன் என்பவர் கஞ்சா பயிர் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தங்கவேல் மற்றும் முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தேனியைச் சேர்ந்த கர்ணன், சின்னகருப்பு என்ற வேலுத்தேவர் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் அருணாச்சலம் மற்றும் கர்ணன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அருணாச்சலம் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து அருணாசலம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி கட்சி தலைமைக்கு தெரிவித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.


காங்கிரஸ் பிரமுகரான அருணாச்சலம் முதலில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே பணம் அதிகம் சம்பாதிக்க நினைத்தபோது தேனியைச் சேர்ந்த சின்ன கருப்பு என்ற வேலுத்தேவர் கர்ணன் என்பவர் மூலம் பழக்கம் ஆகியுள்ளார்.

தேனியில் இருந்து கஞ்சா விதைகளை சின்னகருப்பு மூலம் வாங்கி வந்து அதை நெல் விதை போல் விதைத்து கஞ்சா பயிர் நாற்றங்கால் அமைத்து பிறகு நெற்பயிர்களை நடுவது போல நட்டு கஞ்சா செடிகளை வளர்த்துள்ளனர்.

இந்தநிலையில் தான் கஞ்சா செடி நன்கு வளர்ந்த நிலையில் அதை அறுவடை செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கஞ்சா சாகுபடி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சின்னகருப்பு என்ற வேலுத்தேவர் ஏற்கனவே ஒரு வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். இது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயிலம்பட்டியில் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கஞ்சா செடியை கோர்ட்டு அனுமதி பெற்று அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் கஞ்சா செடியை தீ வைத்து எரித்தால் அதன் புகை சுற்று வட்டார கிராமத்தில் பரவி சுவாசிப்பவர்களுக்கு போதையை ஏற்படுத்தும் என்பதால் அதை வெட்டி சென்னை கொண்டு செல்ல உள்ளனர்.

சென்னையில் கஞ்சா அழிப்புக்கு என போலீஸ் அதிகாரிகள் கொண்ட கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி முன்பு கஞ்சா செடி ஒரு குடோனில் அடுக்கி வைத்து சாம்பலாக்கப்படும். இதற்காக திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!